இம்மாமனிதரைத் தெரிந்து கொள்ளுங்கள்!

Category: Lectures 10 0

questionsநீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம்; அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம்; அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுபவராக இருக்கலாம். நீங்கள் ஒரு பொதுவுடைமைவாதியாகவோ, ஜனநாயகத்திலும் மனிதச் சுதந்திரக் கொள்கையிலும் ஆர்வம் உள்ளவராகவோ விளங்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்களது மதம், அரசியல் கொள்கை எதுவாக இருப்பினும் சரி, உங்களது தனிப்பட்ட, சமூக பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தாலும் சரியே, நீங்கள் அவசியம் இம்மாமனிதரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இம்மாமனிதரைப் பற்றித்தான் பிரிட்டானியக்கலைக் களஞ்சியம் “மதத்தலைவர்கள் அனைவரிலும் தலைசிறந்த வெற்றியாளர்” என்று புகழ்கிறது.

உலகப் புகழ் வாய்ந்த அறிஞர் பெர்னாட்ஷா, “முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இன்று நம்மிடையே இருப்பாரானால், இன்று மானிட நாகரிகத்தையே அழித்திட முனைந்திருக்கும் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் வெற்றி கண்டிருப்பார்” என்று இம்மாமனிதரைப் போற்றுகிறார்.

இம்மாமனிதரைக் குறித்துத்தான், “சண்டையும், சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடி களையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுகளுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த – பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!” என்று வரலாற்று ஆசிரியர் தாமஸ் கார்லைல் வியக்கிறார். இம்மாமனிதர் 1400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய சமுதாயத்தின் அடிப்படைகளே இன்றைய நவீன உலகில் உன்னத சமுதாயத்தை உருவாக்க வல்லவையாக இருக்கின்றன என்று நெப்போலியனும், காந்தியடிகளும் கருதினர்.

அம்மாமனிதர் தாம் முஹம்மத் (ஸல்) அவர்கள். ஆம்; அவர்கள்தாம் மிகக் குறுகிய காலமாகிய இருபத்தி மூன்று ஆண்டுகளில் மாபெரும் சாதனைகளைப் புரிந்து பலரும் புகழும் பெருமை உடையவரானார்கள். அவர் கள் கி.பி. 571 ஆம் ஆண்டு அரேபியா நாட்டில் பிறந்தார்கள். தம்முடைய அறுபத்தி மூன்று ஆண்டு வாழ்வுக்காலத்திற்குள் மக்கள் அனைவரையும் சிலை வணக்கத்தினின்றும் விடுவித்து, ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது ஆகியவற்றில் மூழ்கிக் கிடந்த அம்மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும் பக்தியும் உடையோராய் மாற்றினார்கள்; சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்வாக மாற்றினார்கள். இத்தகைய முழுமையான சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பும் கண்டதில்லை; பின்பும் கண்டதில்லை.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மத ஆசிரியராய் இருந்தார்கள்; ஒழுக்கப் போதகராக இருந்தார்கள்; சமூகச் சீர்திருத்தவாதியாக இருந்தார்கள்; அரசியல் மேதாவியாக இருந்தார்கள்; இராணுவத் தலைவராக இருந்தார்கள்; நிர்வாக அதிபராய் இருந்தார்கள். அதனோடமையாது நட்புக்கினிய நண்பராயும், உண்மை மிக்க உறவினராயும், அன்பு மிக்க கணவராயும், பொறுப்புள்ள தந்தையாயும் விளங்கினார்கள். ஆக, மனித வாழ்வின் உன்னதக் கட்டங்கள் அனைத்தும் அம்மாமனிதரின் வாழ்வில் இணைந்திருப்பதைக் காணலாம். மனித வரலாறு அம் மனிதருக்கு இணையாக வேறெந்த மனிதரையும் அறிந்ததில்லை.

வாழ்வு முழுவதையும் தலைகீழாகப் புரட்டிப் போடும் தூய்மையான புரட்சியை ஏற்படுத்திய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை, உலகில் உள்ள தலைசிறந்த அறிஞர் பெருமக்கள் அனைவரும் உயர்ந்து போற்றும் அந்த உத்தமரை, உலகம் முழுவதிலும் உள்ள 130 கோடி முஸ்லிம்கள் ‘அவர் இறைவனின் தூதர்’ என சான்று பகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கேலிச் சித்திரங்கள் வரைந்து கேவலப்படுத்திட எண்ணிடும் சகிப்புத் தன்மையற்ற மனிதர்களும் உலகில் உள்ளனர் என்பது வேதனையான உண்மையாகும்.

1400 ஆண்டுகளாக அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை, அவரது போதனைகளை, அவர் சாதித்த சாதனைகளை இன்னும் அறியாத மக்கள் கோடிக்கணக்கில் உள்ளதே இதற்குக் காரணம்.

உண்மையில் அவரது வரலாறு நாம் வெறுமனே வாசிப்பதற்காக அல்ல. நமது வாழ்வில் பின்பற்றுவதற்காக; நமது சிந்தனையை செதுக்குவதற்காக; மறைந்து வரும் மனிதத்தை மலரச் செய்வதற்காக; இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்காக.

மனித வாழ்வின் வெற்றி – தோல்வியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவரது செய்தியை இன்று வரையிலும் நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தால் இனியும் நேரத்தை வீணாக்காமல் அவரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு அதிக நேரமும் சக்தியும் தேவைப்படாது. அன்றியும் உங்களுடைய இந்தத் தூய முயற்சி உங்கள் வாழ்வில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்து விடும்!

Related Articles

Add Comment